இன்று ஆனந்த விகடனில் விஜய் டிவி கோபிநாத்தின் நீயும் நானும் கட்டுரையை படித்தேன். மிகவும் ரசிக்கவும், யோசிக்கவும் வைத்தது. ஒவ்வொருவரின் வாழ்கையிலும் காதல் எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது என்று சில பிரபலமானவர்களின் வாழ்கையை மேற்கோள் காட்டி எழுதி இருந்தார். சச்சின், நமது கிரிகெட் வாழ்கையின் பிதா மகன் என்றே கூறலாம். அவரது வாழ்கையில் காதல் எவ்வளவு அழகாக இருந்து இருக்கிறது, அந்த காதல் அவரை எவ்வளவு உயரமான சிகரத்தில் அவரை கொண்டு நிறுத்தி இருக்கிறது என்று அழகாக கூறி இருந்தார். சச்சின் நினைத்திருந்தால் அவரது வசதிக்கும், புகழக்கும் எவ்வளவு பெரிய பணக்கார குடும்பத்தில் இருந்தும் பெண்ணை மணந்து இருக்கலாம். ஆனால் தான் விமான நிலையத்தில் பார்த்த ஒரு பெண் அவரக்கு பிடித்து போகவே இருவரும் பேசி புரிந்து கொள்கிறார்கள். அவரின் மனதில் அஞ்சலி பதிந்த பிறகுதான், அஞ்சலி டாக்டர் என்றும், அவர் தன்னை விட வயதில் மூத்தவர் என்றும் தெரிய வருகிறது. அவர் இன்னும் சளைக்காமல், தடுமாறாமல் பல வெற்றி கனிகளை பறிக்கிறார் என்றால் அவரது உழைப்பையும் தாண்டி அவரது மனைவி அவர் மீது வைத்திருக்கும் காதல்தான் என்று அழகாக சொல்லி இருந்தார்.
இந்த கட்டுரையை படித்து முடித்தவுடன் என் மனதில் பல சம்பவங்கள் தோன்றின. கண் மூடி யோசித்தால் என் மனதிற்குள் ஆயிரம் ஆயிரம் நினைவுகள், உண்ர்ச்சிகள். அதில் சிலவற்றை பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்.. ஆயிரம் கீ.மீ தள்ளி இருந்தாலும் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு தடவையாவது என்னை தொலைப்பேசியில் அழைத்து, " இன்று உன் வேலை எப்படி சென்றது, சரியான நேரத்தில் சாப்டியா, அங்கே குளிர் அதிகமாக இருந்தால் ஸ்வெட்டர் போட்டுக்கோ, வெளிய இரவில் அதிக நேரம் சுற்றாத, உடம்ப பார்த்துக்கோ, பத்திரமா இரு" என்று இன்னும் இந்த 23 வயது வாலிபனை, குழந்தை போல் நினைத்து என்னை அன்போடு விசாரிக்கும் என் அம்மாவின், அப்பாவின் காதல் என்னை என் வாழ்கையில் கொண்டுசென்று இருக்கிறது. தொலைபேசியை வைத்தவுடன் தான் தெரிகிறது எனக்கும் அவர்களுக்கும் நடுவே 1000 கீ. மீ தூரம் எங்களை பிரித்து வைத்து இருக்கிறது என்று. அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பையும், காதலை நினைக்கும் போது, அவர்கள் மீது நான் வைத்திருக்கும் அன்பு நான் இந்த வார்த்தையை அடித்து கொண்டிருக்கும் என் மடிகணினியின் மீது நீர் துளியாக விழுகிறது.
பிறப்பாலும், வளர்ப்பாலும் வெவ்வாறு இருந்தாலும், எங்கோ பிறந்து, வளர்ந்து ஒவ்வொரு திசையில் இருந்து வந்து, மொழி தெரியாத, இது வரை வந்திராத ஒரு நகரில் ஒரே வீட்டில் 2 வருடங்களாக குடும்பம் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கும் என் நண்பர்களுக்கும் இடையேயான காதல் என்னை இந்த நேரத்தில் என்னை இந்த பதிவை எழுத வைக்கிறது.ஆணுக்கும், பெணுக்கும் இடையேயான உறவுகுத்தான் காதல் என்று பெயர் இல்லை. உலகில் உள்ள அனைத்து தூய்மையான உறவுக்கும் பெயர் காதல்தான். எனவேதான் சில வரிகளுக்கு முன்பு "எனக்கும் என் நண்பர்களுக்கும் இடையேயான காதல்" என்று எங்கள் நட்பை சொல்லி இருந்தேன். காலையில் அலாரம் அடிப்பது கூட தெரியாமல் தூங்கிவிட்டு பின்பு அடித்து பிடித்து எழுந்து,கிளம்பி குளியல் அறைக்கு சண்டை போட்டு கிளம்பும் போது மாப்பி வரேன், பாஸ் வரேன் என்று சொல்லி விட்டு விட்டில் இருந்து கிளம்பி வேலையே முடித்து விட்டு இரவு வீட்டிற்கு வந்து இரவு 12 அல்லது 1 மணி வரை உலக நியாயம் முதல் உள்ளூர் நியாயம் வரை அடித்து விட்டு தூங்க செல்லும் வரை ஒரு நாளின் 24 மணி நேரத்தில் குறைந்தது 18 மணி நேரம் அவர்களுடுந்தான் செலவிடிகறோம். எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்கள் காட்டும் அன்பு அல்லது காதல்தான் இன்னும் என்னை இந்த ஊரில் வாழ வைத்து கொண்டு இருக்கிறது. இந்த பதிவில் எனது அருமை நண்பர்களை பற்றி மேலோட்டமாகத்தான் சொல்லி உள்ளேன். அவர்களை பற்றியும், என் வாழ்வில் அவர்களது பங்கை பற்றியும் நிறைய எழுதலாம். விரைவில் தனி பதிவில் எழுதுகிறேன்.
மொத்தத்தில் என்னை மட்டும் அல்ல இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனயுமே அழகாக அவர்களது வாழ்கையில் தொய்வுராமல் கொண்டு செல்வது காதல்தான்.




